'வந்தே மாதரம்' சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டாம்- திருமாவளவன்

 
திருமாவளவன்

பாஜக அரசு நிறைவேற்றியுள்ள 'வந்தே மாதரம்' சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாமெனக் குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“சினிமா ஹீரோ போல திடீரெனத் தோன்றி சாதிய வன்கொடுமையை ஒழித்துவிட முடியாது”- திருமாவளவன்

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில், “வந்தே மாதரம் பாடலை அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் விழாக்களில் கட்டாயமாகப் பாடவேண்டும். இல்லாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்து ஒன்றிய பாஜக அரசு சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள அந்தப் பிரிவினைவாத - மதசார்புள்ள கருத்துகளைக் கொண்ட பாடலுக்கான சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை தடுப்புச் சட்டம் (திருத்தம்) மசோதா, 2026 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் எதிரான ஆபத்தான நடவடிக்கையாகும். அரசியல் நிர்ணய சபை 1950-இல் திட்டமிட்டே எடுக்க மறுத்த முடிவை, 76 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசு சட்டத்தின் மூலம் திணிக்க முயல்கிறது.

1937-ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொதுநிகழ்வுகளுக்கு ஏற்றவை என்றும், பிற சரணங்களில் இடம்பெறும் தெய்வ வழிபாட்டுக் கூறுகளை அனைவர்மீதும் திணிப்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு உகந்ததல்ல என்றும் தெளிவாக முடிவு செய்திருந்தனர். அதையே அரசியல் நிர்ணய சபையும் ஏற்றுக்கொண்டது. அதனால்தான் தாகூரின்  ‘ஜன கண மன’ பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலாக மதிக்கப்பட்டாலும், அதற்கு தேசியக் கொடி, தேசிய கீதம் அல்லது அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த வரலாற்றைப் புறக்கணித்து, ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களுக்கும் குற்றவியல் சட்டப் பாதுகாப்பை வழங்குவது நாட்டை ஒருங்கிணைக்கும் செயல் அல்ல; மாறாக, மத அடிப்படையிலான பிளவுகளை ஆழப்படுத்தும் முயற்சியாகும். ஏற்கனவே பிஜு இமானுவேல் வழக்கில் அளித்தத் தீர்ப்பில், தேசிய கீதத்தைப் பாட மறுத்தாலும் மரியாதையுடன் எழுந்து நிற்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தேசிய கீதத்தையே கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிய நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கத்துக்கு எதிராக, தேசியப் பாடலைக் குற்றவியல் சட்டத்தின் மூலம் திணிக்க முயல்வது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மீறுவதாகும்.

தமிழ்நாடும் கேரளமும் வரலாற்று ரீதியாக ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாகப் பாடச் செய்வதை எதிர்த்து வந்துள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மை, மொழிப் பன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றை மதிக்கும் இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசில் மரியாதை என்பது சட்டத்தின் மூலம் திணிக்கப்பட முடியாது; அது மக்களின் மனங்களில் உருவாக வேண்டும். எனவே, அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட்டு, அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற விழுமியங்களையும் இந்தியாவின் பன்முக அடையாளத்தையும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாட்டை மதரீதியில் பிளவுபடுத்தும் இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.