அம்பேத்கர் விவகாரம்- அமித்ஷா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்
அம்பேத்கர் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்திடும் வகையில் மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், காங்கிரசை விமர்சிக்கும் பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். இதன்மூலம் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்துள்ளது. அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
அமித்ஷா அவர்கள் பேசும்போது, "அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்..என்று சொல்வதே ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று எதிர்க்கட்சியினரைக் கேலி செய்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கேலி செய்வதற்காக அவர் அம்பேத்கரை இழிவுபடுத்தியிருக்கிறார். இது புரட்சியாளர் அம்பேத்கர் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. திரு. அமித்ஷா அவர்கள் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசமைப்புச் சட்டம் தான். பிரதமர் மோடி, தான் ‘பிரதமர் பதவி வகிப்பதற்கு அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசமைப்புச் சட்டமே காரணம்’ என்று பலமுறை பேசியிருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது அமித்ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் மீதான அவரது வெறுப்புப் பேச்சுக்கு அவர் நாட்டுமக்களிடையே வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அடுத்து, அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை பாஜகவினர் வைத்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை காங்கிரஸ்காரர்கள் தான் தோற்கடித்து விட்டனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். ஆனால், அம்பேத்கரைத் தோற்கடித்தது காங்கிரஸ் அல்ல; பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகக் காரணமான சாவர்க்கரே ஆகும். இதைப் புரட்சியாளர் அம்பேத்கரே தெரிவித்திருக்கிறார். 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் அவர் கமலகாந்த் சித்ரே என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ‘தான் காஷ்மீரைப் பிரிக்க வேண்டும் என்று சொன்னதனால் ஆத்திரப்பட்டு டாங்கேவும் சாவர்க்கரும் இணைந்து சதித்திட்டம் தீட்டி தன்னைத் தோற்கடித்தனர்' என குறிப்பிட்டிருக்கிறார். சாவர்க்கரின் இந்த சதித் திட்டத்தை மூடி மறைப்பதற்காகவே பாஜகவினர் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மீது பழி போடுகிறார்கள்.
பாஜகவினர் கூறும் அடுத்த குற்றச்சாட்டு, 'அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காங்கிரசே காரணம்' என்பதாகும். ஆனால் அதுவும் உண்மை அல்ல. புரட்சியாளர் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது 'இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை' சட்டமாக்க முயற்சித்தார். அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இருந்த சனாதன பிற்போக்குவாதிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களை நடத்தி அம்பேத்கரை அவதூறு செய்தது. சனாதனிகளின் எதிர்ப்பின் காரணமாகவே அந்த சட்டத் தொகுப்பை சட்டமாக்குவதற்கு ஜவஹர்லால் நேரு தயங்கினார். இந்நிலையில், சனாதன பிற்போக்கு சக்திகளின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். பின்னர் நேரு அவர்கள் அதே இந்து சட்ட மசோதாவைப் பல பிரிவுகளாகப் பிரித்து சட்டமாக்கினார் என்பது வரலாறு.
1952 இல் பாரதிய ஜனதா கட்சி இல்லை. அது 1980 இல் உருவானது. எனவே, பாஜகவின் முன்னோடிகளான பிற்போக்குவாதிகள் காங்கிரசுக்குள் பதுங்கியிருந்து அப்போது அரசியல் செய்தனர். அவர்களாலேயே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையும் மூடி மறைத்து இன்று பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை வசை பாடுகின்றனர். வரலாற்றை எவ்வளவு தான் இருட்டடிப்புச் செய்தாலும் மக்கள் முன்னால் அது வெளிப்பட்டே தீரும். பாஜகவின் மோசடிப் பிரச்சாரம் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது. அமித் ஷாவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சனாதனக் கும்பலுக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மீது எந்த மரியாதையும் கிடையாது. அவர் மீது தீராத வெறுப்பு கொண்டவர்களே இந்த சனாதனவாதிகள். தலித் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே அம்பேத்கரை மதிப்பது போல அவர்கள் நாடகமாடுகிறார்கள். அந்த பகல் வேடம் அமித்ஷாவின் பேச்சால் அம்பலமாகிவிட்டது. எனவே, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு செய்த அமித்ஷா அவர்கள் உடனடியாக இந்திய மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”க் குறிப்பிட்டுள்ளார்.