ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்றால் திமுகவுக்கு தான் பாதகம் - திருமா
ஈன்ற தாயை பழிக்கும் வகையில் இழிவான சொற்களால் ஆ.ராசா பேசியிருப்பது கண்டனத்திற்குரியது, அண்ணன் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம் அருகே 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மீனவ மக்களும், இதரப் பொதுமக்களும் அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பொதுமக்களின் உணர்வுகளை மதித்து, அதற்கு ஏற்ப அரசு முடிவெடுக்க வேண்டும். இடதுசாரிகள் எடுத்திருக்கும் முடிவு, அவர்களுடைய அரசியல் உரிமை மற்றும் அரசியல் சுதந்திரம். அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள் என்றாலும் கூட, தவெக-வின் ஆட்சி தொடர்வதற்கு அவர்களின் ஆதரவு நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே, இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால் அது தவெக-விற்கு எதிரான நிலைப்பாடு இல்லை.
கொச்சையாகப் பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும். ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்றால் திமுகவுக்கு தான் பாதகம். அமைச்சர் நிர்மல் குமாரின் தாயை பழிக்கும் விதமாக ஆ.ராசா பேசியதால் திமுகவுக்கு தான் பாதகம் ஏற்படும்” என எச்சரித்தார்.

