"முதல்வரின் உடல்மொழி கண்ணியமானதல்ல" - திருமாவளவன்
முதலமைச்சர் விஜயின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் விஜயின் உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை அல்ல. இதுபோன்ற உடல்மொழிகள் மனித மாண்புகளுக்கு எதிரானது. எந்தவொரு சூழலிலும் ஒருவரின் தன்மதிப்பைக் குறைத்து காயப்படுத்துவது நாகரிகம் அல்ல. எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவது நாகரிகம் ஆகாது. மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் உயர்ந்தது. முதல்வருக்கு இனி கவனம் தேவை. மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நடறிந்த ஒன்றாகும். அந்த கொடிய ஒடுக்குமுறைக்கு ஆளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தை, சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பதிவு செய்தது கண்டனத்திற்கு உரியது. அமைச்சர் நிர்மல்குமார் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்” என்றார்.

