“தவெகவும் விசிகவும் இணைந்தே பயணிக்கும்”- மாநாட்டில் கர்ஜித்த திருமாவளவன்
உளுந்தூர்பேட்டையில் நடந்து வரும் விசிக மாநில மாநாட்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு மேடையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் கூட்டம் அதிகரித்து, முண்டியடித்து நின்றதால் திருமாவளவனால் மேடையில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக நீண்ட நேரம் உரையாற்றும் திருமாவளவன், சுமார் 5 நிமிடங்களுக்குள் தனது உரையை முடித்துக்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழர்களின் மொழி, இன மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்க, இலக்கியம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டுள்ளனர். உங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பேச இயலவில்லை. தவெகவும் விசிகவும் இணைந்தே பயணிக்கும்” என்று கூறி நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

