"விஜய்யும், சீமானும் பா.ஜ.க. பெற்றெடுத்த பிள்ளைகள்" - திருமாவளவன்

 
ட் ட்

திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கம் நிறைந்த மலை, ஆணவ கொலைகள் நடந்தபோது நீதிபதிகள் சென்று பார்த்ததுண்டா? என விசிக தலைவரும், எம்பியுமா திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன் எம்.பி., “திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கம் நிறைந்த மலை, ஆணவ கொலைகள் நடந்தபோது நீதிபதிகள் சென்று பார்த்ததுண்டா? திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது. தமிழ் கடவுள் முருகன் எப்படி சமஸ்கிருதம் பேசுகிறவர்களின் கடவுளாக முடியும்? இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக திட்டமிட்டு வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது. பாபர் மசூடி இடிக்கப்பட்டதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும், பைபிள்கள் கொளுத்தப்படுவதும் அதன் விளைவுகள்தான். அப்படி வெறுப்பை விதைக்கிறபோது அதை நாம் எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்? இந்தியாவிலேயே தனித்துவத்தோடு இயங்கும் மாநிலம் தமிழ்நாடு. பீகார், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் ஜம்பம் பலிக்கலாம். தமிழ்நாட்டில் பாஜகவின் ஜம்பம் பலிக்காது.

திமுகவை ஒரு தீய சக்தி என்று விஜய் சொல்கிறார். அவர் முடிந்ததால் திமுகவை அழித்துவிட்டு போகட்டும். எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் விஜய்யின் பின்னால் போயிருப்பேன். எங்களுக்கு கொள்கைதான் முக்கியம்.  நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை. விஜய்யும், சீமானும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. ஒருவர் திமுகவை வீழ்த்தவே கட்சி தொடங்கியிருக்கிறார். மற்றொருவர் தமிழ் தேசியம் என்ற பெயரில் இந்து தேசியமும், பிரமாண தேசியமும் பேசுகிறார். பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாடு மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போட வேண்டாம். தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் மண்ணுக்காக போராடுவதற்காக விஜய் கட்சி தொடங்கவில்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்காக விஜய் கட்சி தொடங்கியுள்ளார். சங்கிகள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்? நீதித் துறையில், காவல் துறையில், உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றத்திலும் இருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றிவிட்டால் கல்வி, உணவு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா? திருப்பரங்குன்றத்தை ஒருபோதும் அயோத்தியாக மாற்றமுடியாது.