பல்வேறு அவதூறுகளை தாங்கிக்கொண்டு திமுகவுடன் ஏன் கூட்டணியில் உள்ளோம் தெரியுமா?- திருமா பரபரப்பு கருத்து
குன்றத்தூர் நகராட்சி சார்பில் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே ஏற்கனவே இருந்த கான்கிரீட் அம்பேத்கர் சிலையை அகற்றி விட்டு தற்போது புதிதாக வைக்கப்பட்ட 9 அடி உயர வெண்கல அம்பேத்கர் திறப்பு விழா நடைபெற்றது இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “சாலை விரிவாக்க பணிக்காக பழைய சிலையை அகற்றி விட்டு புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் பெயரை நிறுவியதற்கு திமுகவிற்கு மிக பெரிய பங்கு உள்ளது. திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரால் திராவிட அரசியலை இன்று பலர் கேவலமான முறையில் விமர்சித்து வருகின்றனர். திராவிட அரசியலை எதிர்க்கிறார்கள் என்றால் திமுக, பெரியார் அளவிலே நின்று விடாது. அம்பேத்கர் அரசியலையும் எதிர்ப்பதாக அமையு ம், அதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்து உறுதியோடு நிற்கிறோம்.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், அம்பேத்கர் கனவு நினைவாக அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு தான் முதல்வருடன் கைகோர்த்து நிற்கிறோம். பல்வேறு அவதூறுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் எனக்கு எதிராகவும் பரப்புகிறார்கள். திமுகவிற்கு கட்டுப்பட்டு நாங்கள் உழன்று கிடக்கிறோம் என விமர்சிக்கிறார்கள். கருத்தியலில் உறுதி பாட்டோடு இருக்கிறோம், அதனால் தான் திமுகவுடன் இருக்கிறோம், தேசிய அளவில் அம்பேத்கரின் அரசியலை பாதுகாக்க வேண்டும் என காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறோம்” என்றார்.


