4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் இருந்தும் திமுக ஆட்சியில் கொடி கூட ஏற்ற முடியவில்லை- திருமாவளவன்

4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் இருந்தும் திமுக ஆட்சியில் கொடி கூட ஏற்ற முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் குறித்த மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “ 4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் இருந்தும் திமுக ஆட்சியில் கொடி கூட ஏற்ற முடியவில்லை. விசிக கொடியை ஏற்றும்போதுதான் சட்டம் பேசுவார்கள். அம்பேத்கரின் அரசமைப்பு நடைமுறைக்கு வரவில்லை என்பதே கசப்பான உண்மை. எளிய மக்களுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிய போராட்டம் உள்ளது. நமது அதிகார வலிமையை இன்னும் அதிகப்படுத்தாமல் உரிமைகளை மீட்டெடுக்க முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்து கோரிக்கையை நிறைவேற்றி கொள்வதே வாய்ப்பாக உள்ளது. அதிகாரிகளை செயல்படவைக்க அரசியல் ரீதியாக வலிமை பெறவேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆறு தொகுதிகளில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் விசிக வெற்றி பெற்றது. சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகபடுத்த வேண்டும்” என்றார்.