“போயஸ் கார்டனில் மணிக்கணக்கில் காத்திருந்தேன்.. என்னை சந்திக்க கூட ஜெயலலிதா விரும்பவில்லை”- திருமா

 
திருமா

ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் தோட்டத்தில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து, விரக்தியில் வெளியேறினோம். தகவலறிந்து தொலைபேசியில் அழைத்த முத்தமிழறிஞர் கலைஞர், என்னை அரவணைத்துக் கொண்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேமூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் , நான் தனியாக தேர்தல் களத்தில் நின்று கொண்டிருக்கும் போது தனக்கு கை கொடுத்து தூக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். அதிமுக அம்மையார் என்னை கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தம் முடிந்துவிட்டது, அதனால் சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா அம்மையார் அனுமதி தரவில்லை. நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் போயஸ் கார்டனில் சென்று மணி கணக்கில் காத்துக்கிடந்து, விரக்தியில் வெளியேறினோம். தகவலறிந்து தொலைபேசியில் அழைத்த முத்தமிழறிஞர் கலைஞர், என்னை அரவணைத்துக் கொண்டார்.

தேமுதிக கேப்டன் விஜயகாந்த் 8% ஓட்டு வாங்கி காட்டிய பிறகு தான் அதிமுகவில் கூட்டணியில் சேர முடிந்தது. விடுதலை சிறுத்தைகள் தனித்துப் போட்டியிடவில்லை, எத்தனை சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என்று உறுதிப்படுத்தவில்லை, தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனாலும் முத்தமிழர் அறிஞர் கலைஞர்  2009-ல் விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதி  கொடுத்தார். வெறும் தேர்தல் அரசியலுக்காக வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் நட்பு பாராட்டிவிட்டு பிறகு போய் வாய்க்கு வந்ததை பேசி உறவை சிதைக்கின்ற ஒரு அணுகுமுறை விடுதலை சிறுத்தைகளுக்கு கிடையாது. எல்லாவற்றிலும் ஒரு நேர்மை வேண்டும் எல்லாவற்றிலும் அந்த நேர்மையான அணுகுமுறை மூலம் தான் நாம் நினைப்பதை அடைய முடியும்” என்றார்.