ரஜினிக்கு திமுக மிரட்டலா?- திருமாவளவன் பதில்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருக்க திமுக அச்சுறுத்தியது என்பது வெறும் கற்பனை என ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆகாஷ் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து பின் விசிகத் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ஆகாஷ் இப்பகுதியில் கள்ளச்சாரயம், போதைபொருள் விற்பனை செய்தவரை தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு எதிராக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் ஆகாஷ்டெலிசன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் ஒரு வழக்குக்காக ஆகாஷ்டெலிசன் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். ஆகாஷ்டெலிசனை மட்டும் தனிமைப்படுத்தி, கால் எலும்பை உடைத்துள்ளனர். இதை பார்க்கும்போது கள்ளச்சாரயத்துக்கு எதிராக செயல்பட்டதால் தான் கால் எலும்பை உடைத்துள்ளனர். மேலும், அவருக்கு சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளிலும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவர் இறப்புக்கு காவல்துறையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல், மருத்துவத்துறையின் அலட்சிபோக்கு, கிராமப்புறம் வரை பரவி இருக்கும் போதைபொருள் கலாச்சாரம் ஆகியவை தான் காரணம். இந்த விஷயத்தை அரசு உரியமுறையில் புலனாய்வு செய்ய வேண்டும். மேலும், உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சிபிசிஐடி கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸாரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் சாட்சிகளை கலைக்காமல் பாதுகாக்க முடியும். தற்போது சிபிசிஐடி விசாரணையே போதும். விசாரணையை பொறுத்து எங்களது கருத்தை தெரிவிப்போம். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தாக்கப்படுவது இந்தியா முழுவதும் நடக்கிறது. தமிழகத்திலும் நடக்கிறது. இதை தடுக்க முதல்வர் தலைமையில் நடக்கும் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருக்க திமுக அச்சுறுத்தியது என்பது வெறும் கற்பனை. அவர் அரசியல் அதிகாரம் அல்லது ஆட்சிக்கு மயங்குபவர் அல்ல. சங் பரிவார்களின் தலையீடு அதிகமாக இருப்பதை உணர்ந்து, அது தனக்கு உகந்தது அல்ல என்று தீர்க்கதரிசனமாகச் சிந்தித்தே அவர் அரசியலைக் கைவிட்டார்” என்றார்.

