ஸ்டாலினுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும்- திருமாவளவன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை அளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 'இசட் பிளஸ்'பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை இழந்தது. அவருக்கு தொடர்ந்து 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தினமும் 55 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்-அமைச்சர் பதவி பறிபோனால் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பு 'இசட்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 3 மாதங்கள் முடிந்திருக்கும் நிலையில், தவெக கூட்டணிக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு குறைப்புக்கு தவெக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை குறைப்பது ஏற்புடையதல்ல. அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை அளிக்க வேண்டும் கொள்கை விளக்க குறிப்பில் பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கத்தில் உள்நோக்கம் உள்ளதா என கேள்வி எழுகிறது. பெயர் நீக்கம் குறித்து அமைச்சர், அதிகாரிகள் விளக்கம் தருவார்கள் என நம்பிக்கை” என்றார்.

