”தவெக மீது தேர்தலுக்கு முன்பு சந்தேகம் இருந்ததால் விமர்சித்தோம்.. தற்போது அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது” - திருமாவளவன்
தவெக மீது தேர்தலுக்கு முன்பு சந்தேகம் இருந்ததால் விமர்சித்தோம், தற்போது அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது.. இதை அகந்தையோடு சொல்லவில்லை.. கள அனுபவத்தில் இருந்து பேசுகிறேன். 5 ஆண்டுகள் தவெக அரசு தொடர்ந்தால் தான் நல்லது. தி.மு.க - அ.தி.மு.க. பலவீனப்படுவதால் எனக்கு என்ன கவலை என கேட்கலாம்..? அவர்கள் பேசும் அரசியலை தான் நாங்களும் பேசுகிறோம்..! பா.ஜ.க எதிர்பார்த்ததை போல் அ.தி.மு.க இன்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.. இதை நான் சில ஆண்டுகளாகவே எச்சரித்து வந்தேன். தேர்தலுக்கு முன்பு த.வெ.க மீது சந்தேகம் இருந்ததால் விமர்சனம் செய்தோம்.. தேர்தலுக்கு முன்பு இருந்த த.வெ.க மீதான சந்தேகம் தற்போது தெளிந்துவிட்டது. தனித்து போட்டியிடாமலும் வாக்குவங்கியை உறுதிபடுத்தாமலும் தொடர்ந்து கூட்டணியில் இடம் பெரும் வலிமை மிக்க இயக்கம் விசிக மட்டும் தான். ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான் இதுகுறித்து பதில் சொல்ல வேண்டும். விளக்கம் சொல்ல வேண்டும். இதில் கருத்து சொல்வதற்கு எனக்கு எதுவும் இல்லை. தவெகவின் ஒரு மாத ஆட்சி குறித்த எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது. தவெகவினரை கற்றுக்கொள்ளும் காலமாகத்தான் எல்லோரும் இப்போது பார்க்கிறார்கள். இந்தி பேசுபவர்கள் கூட என்னை "கிங் மேக்கர்" என்கிறார்கள். ஓரங்கட்டலாம் என நினைத்தால் விசிக மையத்தில் நிற்கும்” என்றார்.

