“அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு வந்தால் அவர்களை தவெக இணைத்துக் கொள்ளக் கூடாது”- திருமாவளவன்
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவது ஆரோக்கியமல்ல. விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக செயல்பட கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பெரம்பலூரில் நடைபெற்ற திமுக - விசிக இடையே ஏற்பட்ட அடிதடி சம்பவம் கவலை அளிக்கிறது. இந்த விரும்பத்தகாத நிகழ்வு வேதனை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமூக வலைதளங்களில் வரும் அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை கேள்விப்பட்டு, அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மாவட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் அதனைத் தவிர்த்துவிட்டார்கள். தகவல் அறியாதவர்களும் அங்கு கூடியிருந்தனர். அங்கு திமுகவினரும் கூடியிருந்தனர். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இயக்கத்தோழர்கள் இடம்கொடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
த.வெ.க.வில் இணையும் அ.தி.மு.க.வினர், இது ஆரோக்கியமான அரசியல் இல்லை. விமர்சனங்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் தவெக செயல்படக்கூடாது, 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்போம் என்ற நம்பிக்கையில் செயல்பட வேண்டும். ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களை தவெகவில் இணைதால் கட்சியின் நம்பகத்தன்மை கெடும். தவெக அரசுக்கான ஆதரவை திரும்பப்பெற மாட்டோம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு வந்தால் அவர்களை தமிழக வெற்றி கழகம் இணைத்துக் கொள்ளக் கூடாது. அது பாஜக தான் கட்சியில் இணைகிறது என்று பொருள்படும். தவெக தலைவருக்கும், பொறுப்பாளர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எந்த சூழலிலும் உங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்.விமர்சனங்களுக்கு தவெக தலைமையிடம் இடம் கொடுக்கக்கூடாது. அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என்று நான் முன்பே கூறியுள்ளேன்.” என்றார்.

