“விசிகவிற்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை”- திருமாவளவன்

 
திருமா

அதிமுக - திமுக கூட்டணி என்பது வதந்திதான், அதிமுக - திமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தலைவர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன்

சென்னை, வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “அதிமுக - திமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான தலைவர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசவில்லை. பொதுவெளியில் பரவலாக பேசப்பட்ட கிசுகிசுக்களின் அடிப்படையில் தான் அதிமுக - திமுக கூட்டணி குறித்தான கருத்தை நான் தெரிவித்தேன். அதிமுக - திமுக கூட்டணி என்பது வதந்திதான். தனிப்பட்ட இரு கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் இல்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் என்ற முறையில் தான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தோம். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்காக மட்டுமே எங்களது ஆதரவை வழங்கியுள்ளோம். குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக்கூடாது, மீண்டும் ஒரு தேர்தல் வந்துவிடக்கூடாது, என்பதனால்தான் ஆதரவளித்தோம். காங்கிரஸ், இடதுசாரிகள் ஏற்கனவே ஆதரவளித்த நிலையில் விசிகவில் உள்ள இரண்டு இடங்களால் ஒரு ஆட்சி அமைவது தடைபடுகிறது என்கிற குற்றச்சாட்டை விசிக பெற்று விடக்கூடாது என்பதற்காகவே தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தோம். எந்தச் சூழலிலும் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என கூறியுள்ளோம். எங்கள் கட்சியின் முன்னணி தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தற்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். விசிக தலைவர் என்கிற முறையில் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று நான் கூறியுள்ளேன். நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்ந்துக் கொண்டே எங்களுடைய ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கிறோம்.


அதிமுக - திமுக கூட்டணி குறித்து என்னை யாருமே அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை. நலன் விரும்பிகள், மத்தியஸ்தர்கள் இதுகுறித்து பேசினார்கள். அரசியலில் இதெல்லாம் நடக்கதான் செய்யும். அவரவர் நிலைப்பாட்டிலிருந்து சூழலிலிருந்துதான் பேசுவார்கள். அரசியல் வட்டாரத்தில் இது குறித்து ஒரு கருத்து பரிமாற்றம் நிகழ்கிறது என்றுதான் என்னிடம் கூறினார்கள். எந்த தரப்பில் இருந்தும் அதிமுக - திமுக கூட்டணி என்கிற முடிவை எடுத்துள்ளோம், அதற்கு ஆதரவு தாருங்கள் என்று என்னிடம் கூறவோ என்னைக் கட்டாயப்படுத்தவோ இல்லை. ஏன் ஒரு தலித் முதலமைச்சர் ஆகக்கூடாது என்கிற விஷயத்தில் எனது நலன் விரும்பிகள் பேசினார்கள் அவ்வளவுதான். முதலிலேயே திமுக கூட்டணியில் இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்குவது தவறில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்துவிட்டோம். இடதுசாரிகள் அறிவித்த உடனே நாங்களும் அறிவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கட்சியில் நான் தனிப்பட்ட முடிவை எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்திற்கு பிறகு தான் எடுக்க முடியும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதுள்ள தோழமை அடிப்படையிலே அவர்களின் முடிவின் அடிப்படையில் நாங்கள் எடுப்போம் என்று கூறினேன். எங்கள் கட்சிக்கான கால அவகாசத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது உடனே காலதாமதம் செய்கிறார்கள், பேரம் பேசுகிறார்கள்  என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? விசிகவிற்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் அப்படியான தொடர்புகளும் விசிகவுக்கு இல்லை. தமிழக வெற்றி கழகத்தினர் எங்களை தொடர்பு கொண்ட போது கூட நிபந்தனைற்ற ஆதரவளிப்பதாகவே கூறினோம். சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் இல்லாததால் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட தாமதம் ஏற்பட்டது. அதிமுக தரப்பிலும் திமுக தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக என்னிடம் கூட்டணி குறித்து பேசுவதாக  கூறவில்லை.


ஒற்றுமையாக, இணைந்து செயல்படுவோம் என திமுக கூட்டணி தலைவர் ஸ்டாலின் எங்களிடம் கூறினார். திமுக, விசிக இணைந்து நீண்ட காலமாக, 3-4 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளதன் அடிப்படையில் திமுக தலைவர் எங்களிடம் அவரது கருத்தை கூறினார். அதிமுக திமுக கூட்டணி குறித்து ஒரு கருத்து பரிமாற்றம் நிகழ்ந்தது.  முதலிலேயே அதை நான் நிராகரித்ததாகவே நான் கூறினேன். அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. பொதுவெளியில் பரவலாக பேசப்பட்ட பிறகு தான் நான் இதை கூறுகிறேன். முற்றிலும் மறைக்க கூடிய விஷயமும் அல்ல. அதிமுக - திமுக கூட்டணி குறித்து பேசலாமா, திட்டமிடலாமா என்பது குறித்து யாருமே என்னிடம் பேசவில்லை. மே 8 ஆம் தேதி இரவு என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதாக வந்த தகவலையும் நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு சமூக நீதி மண், பெரியார் மண் என்று கூறினாலும் சாதிய இறுக்கம் குறையாத விடுபடாத ஒரு மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் அவ்வளவு இலகுவாக ஒரு தலித் முதலமைச்சராகிவிட முடியாது என்பதை முற்றிலும் உணர்ந்தவன் நான். யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டுவிட்டு காத்திருப்பவன் நான் அல்ல. 


40 ஆண்டு பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் உள்ளேன்.  அதனால் களநிலவரம் என்பது எனக்கு தெரியும். யாரோ ஒருவர் சொல்வதை கேட்டுவிட்டு கற்பனையாக நான் செயல்படமாட்டேன். அவ்வாறு செயல்பட வேண்டும் என்றால் நான் ஏன் இடதுசாரிகளுக்காக காத்திருக்க வேண்டும்? எனக்கு தேவை என்றால் நான் தனியாக முடிவெடுத்து இருக்கலாமே? பதவி ஆசை வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு முன்பாகவே நான் தமிழக வெற்றி கழகத்திடம் சென்றிருக்க முடியாதா? தவெகவிடம் உடனடியாக நான் உங்களிடம் சேர்ந்து கொள்கிறேன் எங்களுக்கு ஏதாவது கொடுங்கள் என்று நான் கேட்கவே இல்லையே. மே 7 ஆம் தேதியே மதச்சார்பற்ற அரசை தவெக நிறுவ உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினர். மதச்சார்பற்ற அரசை அமைப்பதுதான் தவெகவின் விருப்பம் என்பரால் காங்கிரஸ், இடதுசாரிகள் தவெக அரசை ஆதரிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்கள். தவெகவை கடந்த காலங்களில் பாஜகவின், ஆர்எஸ்எஸ்-ன் பிள்ளைகள் என நான் விமர்சனம் செய்துள்ளேன். திமுகவே விமர்சிக்காத நிலையில் விஜய்யையும், சீமானையும் விசிக விமர்சித்துள்ளது. எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. விமர்சனம் என்பது வேறு, இன்று ஆதரிப்பதாக எடுத்திருக்கும் முடிவு என்பது வேறு. நெருக்கடி நிலையில் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கிறோம். தவெகவின் மீதான விசிகவின் விமர்சனம் மதிப்பீடு அப்படியேதான் உள்ளது. அதிமுக ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக உடன் இன்றும் தீவிரமான நட்பை கொண்டுள்ளது அதிமுக. அத்தகைய அதிமுகவை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளிப்பதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அவ்வாறு சூழல் அமைந்தால் அதுகுறித்து நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்” என்றார்.