“தவெக தனித்து ஆட்சி அமைக்கவோ ஆட்சியை கைப்பற்றுவதற்கோ வாய்ப்பு இல்லை"- திருமாவளவன்
திமுகவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை நல்கியிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சிலர் தொங்கு சட்டசபை அமையும் என கூறுகின்றனர். சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம். விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டம் நடக்கிறது. சூதாட்ட கும்பல் பரப்பும் வதந்திதான் அது. தேர்தலுக்கு முன் திமுகவை முன்வைத்து சூதாட்டம் நடத்தினார்கள். தேர்தலுக்கு பின் விஜய்யை வைத்து நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின் அவர்கள் ஏமாந்து போவார்கள். தவெக தனித்து ஆட்சி அமைக்கவோ ஆட்சியை கைப்பற்றுவதற்கோ வாய்ப்பு இல்லை.
திமுகவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை நல்கியிருக்கிறார்கள். எங்கள் கூட்டணி வெற்றி பெறும். திமுக ஆட்சி தொடரும். நான் வெளியிட்ட வீடியோவில், ஓரிரு தொகுதிகளில் உட்கட்சி பிரச்சனைகள் காரணமாக விசிக தோழர்கள் அவ்வாறு செயல்பட்டதாகத்தான் கூறினேன். திமுக கூட்டணிக்காக எங்கள் கட்சி தோழர்கள் ஆற்றிய பங்கு போற்றுதலுக்குரியது, மீண்டும் மீண்டும் விசிகவை குறிவைத்து திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அத்தனை சதிகளையும் முறியடித்த கட்சி விசிக” என்றார்.

