"ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை"- திருமாவளவன்

 
திருமா

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமா

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது மூலம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மேலும் வலிமை கூடி இருப்பதாக நான் நம்புகிறேன். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மனதோடு வரவேற்று வாழ்த்துகிறோம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை உரியவராக இருந்தவர். அதிமுகவை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக இயங்கச் செய்ய வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டியது அனைவரும் அறிவார்கள். ஆனால் அவரின் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் பாஜக போன்ற கட்சியில் சேராமல் மீண்டும் ஒரு திராவிட பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது நம்பிக்கையை உயர்த்துகிறது.


பாஜகவோடு நெருக்கமாக இருக்கிறார் அவர்கள் சொல்வதை செய்கிறார் என்கிற விமர்சனங்கள் ஓ பன்னீர் செல்வத்தின் மீது இருந்தது. ஆனால் அவர் இன்று எடுத்திருக்கும் முடிவு அவர் நிதானமானவர் என காட்டுகிறது. பெரியார்,அண்ணா,எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் திமுக என்ற திராவிட இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் திமுகவை மட்டும் அல்லாமல் மதச்சார்பற்ற கூட்டணியை வலிமைப்படுத்தி உள்ளார். நேற்று நான் தலைமைச் செயலகம் சென்று இருந்த போது வரும் 28ஆம் தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என அமைச்சர் எ.வா.வேலு கூறினார். ஆனால் 28-ம் தேதி நான் சென்னையில் இல்லை ஊருக்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளேன். இதனால் இரண்டாம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என நான் தெரிவித்துள்ளேன். எனது தலைமையில் இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். இதற்காக தனி குழுவை நாங்கள் அமைக்கவில்லை. இது மெகா கூட்டணி அதிக கட்சிகள் இணைந்து கொண்டு இருக்கின்றன. அந்தந்த கட்சிகளின் வலிமைக்கு ஏற்ப  அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அனைவரையும் அரவணைப்பார். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி அந்த கட்சியின் இறுதி முடிவு டெல்லியில் தான் எடுப்பார்கள். டெல்லியில் இருந்து வரும் தகவல்களுக்கு நான் பதில் சொல்லலாம் மற்றபடி காங்கிரஸ் கட்சியில் மாற்றுக் கருத்துக்களை சொல்லக்கூடியவர்கள். எப்போதும் சொல்லுவது வழக்கம் அதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது” என்றார்.