செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை- திருமாவளவன்

 
ச் ச்

முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் இன்னும் மனம் திறந்து வெளிப்படையாக பல விஷயங்களை கூற முன் வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுகொண்டார்.

கட்சியை பலப்படுத்தும் விதமாக அதிமுகவிலிருந்து விலகியவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுகவை அகற்றி நல்லாட்சி கொடுக்க முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “செங்கோட்டையன் முயற்சிக்கு வரவேற்பு.. பாஜக - RSS பிடியில் இருந்து அதிமுக வெளியே வர வேண்டும் என்ற கவலை எங்களுக்கு எப்போதும் உண்டு. செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போவதாக சொல்லியிருந்தார். ஆனால் முழுமையாக மனம் திறக்கவில்லை என்பது அவர் பேட்டியிலிருந்து தெரிகிறது. யார், யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என அவர் வெளிப்படையாகவே சொல்லலாம். ஆனால் அவர் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என அவர்களது பெயர்களை கூட கூறவில்லை. இருப்பினும் அது அவர்களின் உட்கட்சி விவகாரம். செங்கோட்டையன் இன்னும் மனம் திறந்து வெளிப்படையாக பல விஷயங்களை கூற முன் வர வேண்டும். அதிமுகவை ஒன்றுபடுத்தும் செங்கோட்டையனின் முயற்சி வரவேற்புக்குரியது” என்றார்.