"ஆட்சியில் பங்கு... ஆசைகாட்டினார்கள்..." திருமாவளவன் பரபரப்பு பேச்சு

என்னை துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க. கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தோற்று போகியுள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் நுழைவு வாயிலில், தந்தை பெரியார், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சீரமைத்த புதிய வெண்கல திருஉருவ சிலைகளை ஆசிரியர் கி.வீரமணி மற்றும் தொல்.திருமாவளவன் எம்.பி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “அதிமுகதான் தலைமை தாங்குகிறது என்றால் ஈபிஎஸ் தானே கூட்டணியை அறிவிக்க வேண்டும்? ஈபிஎஸ் சுதந்திரமாக முடிவு எடுக்காதபடி அவரை பக்கத்தில் வைத்து கூட்டணியை அமித்ஷா அறிவிக்கிறார். வளைந்து கொடுப்பதால் முறித்து விடலாம் என முயற்சித்தார்கள், ஆனால் முறிந்து விட மாட்டேன். நான் வளைந்து கொடுப்பவன் தான், ஆனால் அவ்வளவு இலகுவாக என்னை உடைக்க முடியாது. நான் ‘More Flexible, but More Strong’ என்பது பலருக்குத் தெரியாது. கூடுதல் சீட் வழங்கப்படும், ஆட்சியில் பங்கு... ஆசைகாட்டினார்கள். திமுக கூட்டணியை விட்டு வெளியே வர நிர்பந்தித்தனர்.
என்னை துருப்புச் சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் கனவு கண்டனர். சராசரியான அரசியல் நகர்வுகளுக்கு ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் இடம் கொடுத்ததில்லை. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை பாஜக தலைமை தாங்கி வழிநடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.