“விசிக பலவீனமடைகிறதா? திமுக கூட்டணியில் நெருக்கடியா?”- திருமாவளவன் பரபரப்பு பேட்டி

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை என்றும் திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் பங்கு உள்ளது. அதேபோல அதை காப்பாற்றுவதற்கான பொறுப்பும் விசிகவுக்கு உள்ளது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், “உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேரை நியமன செய்ய உள்ளனர். அனைத்து பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களை சார்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் உள்ள பிறமலைக்கள்ளர், அருந்ததியர், மறவர், ஆதிதிராவிடர் சமுதாயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீதிமன்ற நியமனங்களில் இல்லை என்ற முறை உள்ளது. இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உரிய நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரை சந்தித்து நீதிபதிகள் முறையிட்டுள்ளார்கள். சமூக நீதியை பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதல்களை அரசும் சட்டத்துறையும் வழங்க வேண்டும். மத நல்லிணக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி அளிக்காதது அதிர்ச்சியை அளிக்கிறது.
திமுக கூட்டணியில் எந்த சலலப்பும் இல்லை. கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையோடு இருக்கின்றோம் என்பதுதான் அவர்களுக்கு உள்ள சிக்கல். இல்லாதது பொல்லாததை இட்டுக்கட்டி பேசுகிறார்கள். மற்றபடி அதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராடி வருகிறோம். திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. திமுக கூட்டணியில் விசிகவும் ஒரு அங்கம். திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் பங்கு உள்ளது. அதேபோல அதை காப்பாற்றுவதற்கான பொறுப்பும் விசிகவுக்கு உள்ளது. அனைத்து பொறுப்புகளையும் ஏற்று செயல்படக்கூடிய கட்சியாகத்தான் விசிக உள்ளது.எந்த இடத்திலும் பலவீனப்படவில்லை” என்றார்.