திமுக கூட்டணியில் விரிசலா?- திருமாவளவன் பதில்

தொகுதி மறு வரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறும் கட்சிகளின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் அதிர்ச்சிகரமாக உள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில் SC/ST பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட அரசமைப்பு சட்ட பிரிவு 16 (4A) வை நடைமுறைபடுத்த வேண்டும் என்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாநில அரசுப் பணிகளில் SC/ST பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிடும் சட்ட திருத்தம் வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தொகுதி மறு வரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறும் கட்சிகளின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் அதிர்ச்சிகரமாக உள்ளதாகவும் திருமாவளவன் கூறினார். மேலும், இந்தியை பேச வேண்டும் என்று பாஜகவின் கருத்திற்கு ஆதரவாக பேசுவது அந்த அரசியல் கட்சிகளின் அரசியல் ஆதாயத்திற்கு தான் என்று புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் கூறினார். கச்சத்தீவு தொடர்பான ஆளுநரின் கருத்து தொடர்பான கேள்விக்கு ஆளுநர் நாடகம் ஆடுவதாகவும் அரசியல் செய்வதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி உடைந்து விடும் என்ற ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என்பது அவருக்கே தெரியும் என்று திருமாவளவன் பதில் அளித்தார்.