“சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? தற்போது பெரியாரை எதிர்க்க என்ன அவசியம்?” - திருமாவளவன்

 
திருமாவளவன் சீமான்

சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சமூக நலக் கூடத்தில் தோழர் எஸ். நடராஜன் படத்திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “பொருத்தம் இல்லாத அரசியலை சீமான் பேசிக்கொண்டு உள்ளார்.  தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கான தேவை ஏன்? வந்தது என்று புரியவில்லை. பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளை பெற இந்த யுக்தியை கையாளுகிறாரா என்று ஐயம் எழுகிறது. தந்தை பெரியார் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தின் எதிர்ப்பாளராக இருந்தார். அவரின் சமகாலத்தில் அவரை வீழ்த்த பார்ப்பன உயர்சாதி அமைப்புகள் மிகக் கடுமையாக அவரை விமர்சித்து வீழ்த்த முயற்சித்தார்கள் முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், அதே வேலையை தற்போது சீமான் செய்கிறார்.


சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? என்ற கேள்வி எழுகிறது. அவர் செய்யும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது. யாருக்கு துணை போகிறார்? தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியல் ஏன் செய்கிறார்? என்ற கேள்வி எழுகிறது. கவனம் ஈர்ப்பதற்காக அவர் பேசுகிறார் என்பதை தவிர அரசியல் ரீதியாக அவர் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. சீமானின் அரசியல் இனவாதத்தை நோக்கி பாசிச கூறுகளைக் கொண்டதாக உள்ளது. அது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல் மீண்டும் சுட்டிக்காட்டுகிறேன்” என்றார்.