பாஜக எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராது- திருமாவளவன்

ஓபிசி மக்களின் முதல் எதிரியே பாஜகதான். அண்ணாமலை நடைபயணத்தில் வருபவர்கள் அதிமுக மற்றும் பாமகவினர்தான் என சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “இந்தியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு கட்சியாக இருக்கிறது. வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் டிசம்பர் 23ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. சிதம்பரம் பகுதிகளிலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி முயற்சி செய்வதாக தெரிகிறது. அதை கைவிட வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஊழியர் பணி நிரவலின்போது சமூக' நீதியை கருத்தில் கொண்டு எஸ்சி, எஸ்டி சமூகத்தைச் சார்ந்தவர்கள் இங்கேயே பணிபுரியும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி பல்கலைக்கழக கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற நவம்பர் 17ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும். தங்கச்சிமடம் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதை வலியுறுத்தி மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனையில் உடனே தலையிட வேண்டும். கைப்பற்றப்பட்ட படங்களை உடனே ஒப்படைக்க வேண்டும். ஓபிசி மக்களின் முதல் எதிரியே, இந்துக்களின் முதல் எதிரியே பாஜகதான். மக்களிடம் இயல்பாக இருக்கின்ற மத உணர்வை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகின்ற மோசமான அரசியலை பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து செய்கிறது. இதை ஓபிசி சமூகங்களைச் சார்ந்த இந்துக்கள் உணர வேண்டும். பிற மதங்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலை விதைத்து, வன்முறையை தூண்டுகிறது. எல்லா பாதிப்புக்கும் பிஜேபி அரசுதான் காரணம் என்பதை ஓபிசி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறும் ரெய்டு சம்பவங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவங்களின் மூலம் பாஜக திமுகவை அச்சுறுத்துவதாக நினைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். பாஜக எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராது. இது அவர்களுக்கே தெரியும்.
திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவோம். இதை அதிமுக பொதுச்செயலா எடப்பாடி நன்கு அறிவார். அதிமுக தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது. கூட்டணி கட்சியாக இருந்து கொண்டே அதிமுகவை பலவீனப்படுத்தும் வேலையை பாஜக செய்தது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை முன்னிறுத்துகிறது. அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார் என்றால் அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பேரணியில் வருகிறவர்கள் யார்? கூட்டங்களில் பங்கேற்பவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும். அண்ணாமலை நடைபயணத்தில் தொண்டர்களாக வருபவர்கள் பாஜகவினர் இல்லை. அதிமுக, பாமக கட்சியினர்தான் அவர்கள். அதிமுக, பாமகவில் இருப்பவர்களை மெல்ல மெல்ல பாஜகவினர் அவர்கள் கருத்தியலுக்கு மாற்றி வருகிறார்கள். இது அதிமுகவிற்கு பெரும் பேராபத்தை விளைவிக்கும். திமுகவை எதிர்க்கும் வலிமை கொண்டதாக அதிமுக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பாஜகவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 90 சதவீதம் அதிமுகவின் வாக்குகளை பெற்றுத்தான் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் அதிமுக எம்எல்ஏக்களை போலத்தான். அதிமுகவை விழுங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. வட இந்திய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை விழுங்கிதான் பாஜக தங்களை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு மட்டுமே எனக்கு ஆர்வம். ஏற்கனவே 5 முறை போட்டியிட்டு இருக்கிறேன். அதில் 2 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் இந்த தொகுதியையும், தொகுதி மக்களையும் நான் நேசிக்கிறவன். இந்த தொகுதிக்கு எதிராக நான் எந்த விதத்திலும் செயல்பட்டதில்லை. 24 மணி நேரமும் அரசியல் செய்து கொண்டிருப்பவன் நான். ஒவ்வொரு நாளும் நான் மக்களோடுதான் இருக்கிறேன். சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பரப்பப்படும் வதந்திகள் ஏற்கெனவே எனக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் ஆசை” எனக் கூறினார்.