நேற்று சட்டசபையில் எதிர்வினை ஆற்றிய முதல்வரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது - திருமா

 
Thiruma

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவருக்கு ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

thiruma

இதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,  ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு செய்யவில்லை. அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவே செய்துள்ளார் .முன் அனுபவம் உள்ள ஆளுநர் இவ்வாறு செய்வது உள்நோக்கத்துடன் திட்டமிட்டது. ஆளுநர் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார் .ஆளுநரை கண்டித்து உடனடியாக எதிர்வினை ஆற்றிய முதல்வரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது . இது மத்திய மாநில அரசுகள் இடையேயான உறவு மற்றும் தொடர்பு குறித்த முரண்பாடு. வருகிற 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.  

Thiruma

முன்னதாக  தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றதில் இருந்தே மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.   தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியானது என்று அண்மையில் ஆளுநர் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.   இந்த சூழலில் நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சமூக நீதி ,சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ,சமத்துவம் ,பெண்ணுரிமை ,மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார் ,அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ,பேரறிஞர் அண்ணா ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்று ஆளுநர் தவிர்த்து உரையை  வாசித்தார்.   ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை ஆளுநர் முன்னிலையிலேயே  தெரியப்படுத்திய நிலையில் ஆளுநர் அவையில் இருந்து பாதியிலேயே கிளம்பினார்.  அத்துடன் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.