"விசிகவும் ஆளும் கட்சிதான்" - முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

 
x

தவெக கூட்டணி அரசில் பங்கு பெற்றதன் மூலம் நாங்களும் ஆளும் கட்சி என்ற அடையாளத்தை பெற்று இருப்பதும் ஒரு வளர்ச்சிதான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்யை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “100 நாட்கள் ஆட்சி நிறைவு செய்ததை ஒட்டி முதலமைச்சரை சந்தித்தேன். தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு வாழ்த்துகள். தவெக அரசுக்கு, விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.  தவெக கூட்டணி அரசில் பங்கு பெற்றதன் மூலம் நாங்களும் ஆளும் கட்சி என்ற அடையாளத்தை பெற்று இருப்பதும் ஒரு வளர்ச்சிதான். விசிக மாநாட்டு தீர்மானங்களை CM விஜய்யிடம் வழங்கினோம். தமிழர் அனைவரும் ஒரே அணியில் நிற்கிறோம். மாநில சுயாட்சியை வலுவாக முன்னெடுக்க வேண்டும். மேகமலை, அமுதன் கொலை தொடர்பாக CM விஜய்யிடம் பேசினேன். 

மேகமலை தீர்ப்புக்கு எதிராக தாமதமின்றி சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். போதைப் பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தேன். தற்போதைய தவெக ஆட்சியுடன் திமுக ஆட்சியை ஒப்பிடுவது தேவை இல்லாதது.  சட்டம், ஒழுங்கு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அதில் பொறுப்பு உள்ளது. நாங்கள், நாங்களாகவே இருக்கிறோம். எங்கள் வீரியம் குறையவில்லை. நாங்கள் எங்கும் நீர்த்துப் போகவில்லை. மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும்” என்றார்.