திருமா குறித்து அவதூறு பேசியதாக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கற்கள், காலணிகளை தூக்கி வீசி விசிகவினர் ரகளை
அரூரில் நடைபெற்ற பாஜக கண்டன ஆர்பாட்ட கூட்டத்தில் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக தெரிவித்த பாஜகவினருக்கும் விசிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போது தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசு, தமிழக முதல்வர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், மகளிர் உரிமைத்துறை, தற்போது வழங்கப்பட்டு வரும் ஐந்தாயிரம் ரூபாய், மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் போன்ற பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சாடினர்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி பாஜகவினர் அவதூராக பேசியதாக தெரிவித்து அருகே இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டு வந்து தங்கள் தலைவர் மீது அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் கூட்டத்தை நடத்தி விடமாட்டோம் என தெரிவித்து பாஜகினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் தலைவரின் மீது தேவையில்லாமல் தேவையற்ற விமர்சனங்களை வைப்பதற்கு பாஜக கட்சிக்கும், அதில் இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கும் உரிமை இல்லை, தங்கள் தலைவர் பட்டியல் இனத்திற்காக பாடுபடுபவர், ஆனால் பாஜக அப்படியல்ல என தெரிவித்தனர். அப்போது பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளால், ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவினரை தாக்க முற்பட்டனர். இதனை தொடர்ந்து சாலையின் நடுவே நட்டு வைக்கப்பட்டிருந்த பாஜக கட்சி கொடியை பிடுங்கி எரிந்து, பாஜக நிர்வாகிகள் மீது விசிகவினர் செருப்புகளை வீசினர். மேலும் அதிலிருந்து இளைஞர் ஒருவர் கற்களை எடுத்து தாக்க முற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் இருந்த காவல்துறையினர், அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் ஆர் ஆர் முருகன் உள்ளிட்டோர் இரண்டு கட்சிணரையும் சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

