தவெக தலைவர் விஜயுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பா? - திருமாவளவன் விளக்கம்

 
thiruma thiruma

தவெக தலைவர் விஜய் உடன் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் வெளியிட்டார். அவரது கொள்கை, கோட்பாட்டிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். அந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு என அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு சிறிய கட்சிகள் பலவற்றையும் பெரிதும் ஈர்த்தது. இதனிடையே விஜயும், விசிக தலைவர் திருமாவளவனும் டிசம்பர் 06ம் தேதி ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் உடன் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், அம்பேத்கர் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் கலந்துகொள்ள ஒப்புகொண்டதாகவும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி எனவும் கூறினார். தவெக மாநாடு தொடங்கும் சில தினங்களுக்கு முன்னர் தான் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்கள் எனவும் கூறினார். எனவே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கூறினார்.