தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

 
thiruma

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: நச்சு சாராயத்தை அருந்தி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வேதனையை தருகிறது. தமிழக முதல் அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்திருப்பது ஆறுதலை தருகிறது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தாலும், தமிழக அரசு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதாக விசிக கருதுகிறது. 

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, அரசு மதுக்கடைகளை சட்டப்பூர்வமான அனுமதித்த நிலையிலும் கூட, கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.  மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மதுக்கடைகளை அனுமதித்தாலும், கள்ளச்சாராயம் புழங்குகிறது. எனவே கள்ளச்சாராய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும், மதுவிலக்கை அமல்படுத்துவதும் சம காலத்தின் நிகழ வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவே அரசு மது விற்பனையை அனுமதிக்கிறது என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை. அது ஏற்புடையதும் இல்லை. அதனால் பயனும் இல்லை.  எனவே முதல் அமைச்சர் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும். படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.