11 லட்சம் அகல் விளக்குகளால் ஜொலித்த வாரணாசி : கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேவ் தீபாவளி திருவிழா!
வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற 'தேவ் தீபாவளி' திருவிழா மிகுந்த பக்திப் பரவசத்துடனும், கலாச்சார நிகழ்ச்சிகளுடனும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான அகல் விளக்குகளின் ஒளியாலும், பக்திப் பாடல்களாலும் கங்கை நதிக்கரைப் படித்துறைகள் ஜொலித்தன. இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்தைக் காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வாரணாசியில் குவிந்தனர்.
விழாவையொட்டி வாரணாசியில் உள்ள அனைத்து 84 படித்துறைகளிலும் சுமார் 11 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும், லேசர் மற்றும் ஒளி காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கங்கா ஆரத்தி ஆகியவை கங்கைக் கரையில் பண்டிகைச் சூழலை மேலும் மெருகூட்டின. தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் (X) தளத்தில், "இன்று பாபா விஸ்வநாதரின் நகரத்தில் தேவ் தீபாவளியின் அற்புதமான தெய்வீகமும், விண்ணுலகப் பேரழகும் எங்கும் நிறைந்து காட்சியளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
बाबा विश्वनाथ की नगरी में आज सर्वत्र देव दीपावली की अद्भुत दिव्यता और अलौकिक छटा बिखरी हुई है। https://t.co/ebKu4wZ1Tp
— Narendra Modi (@narendramodi) November 24, 2026
बाबा विश्वनाथ की नगरी में आज सर्वत्र देव दीपावली की अद्भुत दिव्यता और अलौकिक छटा बिखरी हुई है। https://t.co/ebKu4wZ1Tp
— Narendra Modi (@narendramodi) November 24, 2026
விழாவின் சிறப்பு குறித்துப் பேசிய பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகர் அனுப் ஜலோட்டா, வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல கங்கைக் கரையில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுவது உலக அளவில் பேசப்படும் தனித்துவமான காட்சி என்றும், சனாதன தர்மத்துடன் தொடர்புடைய அனைவரும் இங்கு வந்து இந்த அழகை ரசிக்க வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக, டாக்டர் ரேவதி சகல்கரின் பக்தி மற்றும் தேசபக்தி இசை நிகழ்ச்சியுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. அனுப் ஜலோட்டா, தேவேந்திர குமார் பாரதி, ஹிமான்ஷு திவாரி மற்றும் அமர்ஜீத் சிங் ஆகியோரும் கங்கைக் கரையில் இசை அஞ்சலி செலுத்தினர்.
தசாஸ்வமேத படித்துறையில் கங்கா சேவா நிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், 21 அர்ச்சகர்கள் மற்றும் துர்கா சரண் இன்டர் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட கங்கா ஆரத்தி நடத்தினர். இங்குள்ள படித்துறைகளில் மட்டும் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. வேத மந்திரங்களுடன் தொடங்கிய ஆரத்தியில், ராம் ஜனம் யோகி என்பவர் 4 நிமிடங்கள் 21 வினாடிகள் தொடர்ந்து சங்கு ஊதி ஆன்மீகச் சூழலை ஏற்படுத்தினார். காசி விஸ்வநாதர் டமரு குழுவைச் சேர்ந்த 10 தன்னார்வலர்களும் இதில் பங்கேற்றனர். மேலும், 'ஏக் சங்கல்ப் கங்கா கினாரே' என்ற பிரச்சாரத்தின் மூலம் கங்கையைத் தூய்மையாகவும் மாசற்றதாகவும் வைத்திருக்க பக்தர்கள் உறுதிமொழி ஏற்குமாறு வலியுறுத்தப்பட்டது.
நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தசாஸ்வமேத படித்துறையில் 20 அடி உயர 'அமர் ஜவான் ஜோதி' மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. இதில் முப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வீரமரணமடைந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் உதாவுர் ரஹ்மான் கான், கோலாஹல் யாதவ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் சஷிகாந்த் சிங், ராம்விலாஸ் சிங் யாதவ் ஆகிய நான்கு பேரின் குடும்பத்தினருக்கு 'பகீரத் சௌர்ய சம்மான்' விருதுடன் தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. அத்துடன், இந்த வீரர்களின் குழந்தைகளின் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாக கங்கா சேவா நிதி அறிவித்துள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததோடு, கங்கா சேவா நிதி மற்றும் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தைச் சேர்ந்த 250 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவசர உதவிக்காக மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) நீர் ஆம்புலன்ஸ் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. லக்னோ மத்திய கமாண்ட் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராகவும், சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் தலைவராகவும் பங்கேற்ற இவ்விழாவில், உத்தரப் பிரதேச அமைச்சர் ரவீந்திர ஜெய்ஸ்வால், பிஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் பிரவீன் குமார் மற்றும் பாரத் சேவாஷ்ரம் சங்கத் துறவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

