10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் விஏஓ தற்கொலை

தர்மபுரி மாவட்டம் வாசாத்தி மலை கிராமத்தைச் சார்ந்த பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த சிவலிங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 10 மாதத்திற்கு முன்பு ஓசூர் பகுதியில் இருந்து சிவலிங்கம் ஊத்தங்கரை அருகே நடுப்பட்டி கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 10 மாதங்களாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பொருளாதார சூழ்நிலையில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பத்து மாதமாக கிராம நிர்வாக அலுவலருக்கு சம்பளம் வழங்காத மாவட்ட நிர்வாகம் மேலும் மற்றும் அதைச் சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம் குடும்பத்திற்கு அரசு பணி மற்றும் 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளிடம் பேசிய தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் அசோசியேசன் சங்க மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டன், பல்வேறு பணிச்சுமை, நிதிசுமையில், பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலைக்கு காரணமான நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.