மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி அடிக்க பாய்ந்த விஏஓ!

 
விஏஓ

மயிலாடுதுறை அருகே மனு கொடுக்க வந்த மக்களை விஏஓ ஒருமையில் பேசி அடிக்க பாய்ந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிவருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவாளப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் பட்டா வேண்டி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, அப்பகுதி விஏஓ நெப்போலியன் அந்த இடத்தை ஆய்வு செய்து வருவாய் ஆய்வாளரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழரசன், அவரது மருமகன் நவீன் ஆகியோர்  தாலுகா அலுவலகம் சென்று பட்டா வழங்குவதற்கு விஏஓ நெப்போலியன் தடையாக இருப்பதாக தாசில்தார் விஜயராணியிடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாசில்தாரின் உத்தரவின் பேரில் நேற்று சர்வே துறையினருடன் சென்று அந்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது தமிழரசன் தரப்பினர் நெப்போலியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 


வாக்குவாதம் முற்றியபோது அதனை நவீன் வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்ததை கண்டித்து தடுத்த விஏஓ-வை, நவீன் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஏஓ ஆக்ரோஷமாக பேசும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த தமிழரசன் தரப்பினர்; மனு கொடுக்க வந்த மக்களை விஏஓ ஒருமையில் பேசி அடிக்க பாய்ந்ததாக அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த 10 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து, தாசில்தார் விஜயராணி உத்தரவின்பேரில் விஏஓ நெப்போலியன் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தங்களை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததுடன், தன்னை தாக்கிய தமிழரசன், நவீன் உள்ளிட்ட 4 பேர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.