நிலம் அளவீடு செய்ய லஞ்சம்- வி.ஏ.ஓ. கைது

 
ச் ச்

நிலம் அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையன் (45). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நிலத்தை அளந்து அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனிடம்  விண்ணப்பித்துள்ளார். அதற்கு பிரபாகரன் முப்பதாயிரம் பணம் கொடுத்தால் நில அளவீடு செய்து தருகிறேன் என்று பேரம் பேசி உள்ளார். இது சம்பந்தமாக விவசாயி கண்ணையன், சேலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

அதன் பெயரில் இன்று மதியம் விவசாயி கண்ணையன் காமக்காபாளையத்தில் உள்ள  கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனிடம் பணம் பத்தாயிரம் கொடுத்த பொழுது அங்கு சேலம் லஞ்ச ஒழிப்பு  துறை காவல் ஆய்வாளர்  முருகன் தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்  பிரபாகரனை கையும் களவுமாக பிடித்து அவரிடம்  இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக உதவியாளர் வேல்முருகன் என்பவரையும் பிடித்து விசாரணை செய்தனர். இதில் நில அளவீடு செய்ய விவசாயி கண்ணையனிடம் பேரம் பேசி பணம் பத்தாயிரம் பெற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அதற்கு உடந்தையாக இருந்த உதவியாளர் வேல்முருகன் ஆகிய இரண்டு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்துச் சென்றனர்.