"இளையராஜா குடும்பத்தில் நான் மருமகளாக செல்ல வேண்டியவள்..." - வனிதா விஜயகுமார் பேட்டி
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தது குறித்த கேள்விக்கு, நடிகை வனிதா விஜயகுமார் அழுதபடி பதிலளித்தார்.

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வனிதா இயக்கத்தில் அவரது மகள் ஜோவிகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் தொடங்கி அனைத்து புரமோஷன்களையும் வித்தியாசமான முறையில் வெளியிட்டு வந்த படக்குழு, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து வந்தனர். படம் ரொமாண்டிக் காதல் கதைக்களத்தை கொண்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் ‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். மைக்கேல் மதன காமராஜா திரைப்படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவ ராத்திரி பாடலை படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும், அந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இளையராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், “நான் இளையராஜா குடும்பத்தில் நான் மருமகளாக செல்ல வேண்டியவள்.. சின்னவயசிலிருந்து அவர் வீட்டில் வளர்ந்துள்ளேன். அந்த குடும்பத்தில் ஒருத்தி, அவர் குடும்பத்திற்காக நிறைய உழைத்திருக்கிறேன். படம் வெளியான பின்னர் அவரிடம் கூறிவிட்டு, நேரில் சென்று வாழ்த்து பெற்றேன். தனது மகள் தயாரிப்பில் தான் நடித்து வெளியாகியுள்ள MRS & MR படத்தை தயவு செய்து ஒருமுறையாவது பாருங்கள். இளையராஜா கடவுள் மாதிரி, அவரே கோபித்து கொண்டால் என்ன செய்வது? சோனி மியூசிக்கிடம் நாம் உரிமம் பெற்றுள்ளோம்” என்றார்.


