காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை- வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் தடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Exclusive: என்னாது திமுகவில் சேரப்போறேனா.. பாஜக வானதி சீனிவாசன் பளீர் பதில்  | BJP Vanathi Srinivasan refuses about rumours that she is joining in DMK -  Tamil Oneindia

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை விருகம்பாக்கத்தில், மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர்ராஜா உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தி.மு.க. நிர்வாகிகள் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்தக் கொடுமை தாங்காமல் அந்தப் பெண் காவலர் கதறி அழுதிருக்கிறார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொது வாழ்க்கையில் பயணிக்கும் பெண்ணாக, என் மனம் வேதனையில் துடிக்கிறது.

இந்த கொடுமை தொடர்பாக, நீண்ட தாமதத்திற்கு பிறகு, பிரவீன், ஏகாம்பரம் என்ற இரு தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிறகு, வேறு வழியின்றி இந்த கைது நடவடிக்கையை ஆளும் தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது. தமிழகத்தின் தலைநகரில், இரண்டு பெண் எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றவாளிகளுக்கு பெரும் தைரியம் வந்துவிட்டது. எதை செய்தாலும், தி.மு.க. அரசு கண்டுகொள்ளாது என்ற அவர்களின் துணிச்சல்தான், பெண் காவலர் ஒருவரை சீண்டும் அளவுக்கு சென்றுள்ளது. இது நமது ஆட்சி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை காப்பாற்ற எம்.பி. இருக்கிறார். எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர் இருக்கிறார் என்ற தைரியம் தி.மு.க.வில் உள்ள ரவுடிகளுக்கு வந்து விட்டது. அதன் விளைவே விருகம்பாக்கம் சம்பவம்.

மத்திய அமைப்புகளுடன் இணைந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்  வலியுறுத்தல்! | Drug eradication should be done in collaboration with  central agencies - Vanathi ...


தி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க. நிர்வாகிகளை, சம்பவ இடத்திலேயே காவல் துறையினர் பிடித்துள்ளனர். ஆனாலும், அந்த கயவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை. பெண் காவலருக்கு பாலியல் தொந்தர கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய முடியாத அளவிற்கு, காவல் துறையினரின் கரங்களைக் கட்டிப்போட்ட அந்த அதிகார மையம் யார் என்பதை, காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்யாமல் காப்பாற்றியவர்கள் எம்எ.ல்.ஏ.வாக இருந்தாலும், தி.மு.க.வில் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.