அமைச்சர் ஷாஜகானின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்..!!
இஸ்லாமியர்களுக்கு கலைஞர் ஆட்சியில் தரப்பட்ட 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டு வருகிறது. கடந்த 10 தினங்களுக்கு முதலமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறோம். அவர்களும் உரிய ஆய்வினை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்து இருக்கிறார்கள். அது நிச்சயமாக உயர்த்தி கிடைக்கும் என்று நம்புகிறோம் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ‘தமிழகத்தில் 3.5%-ஆக உள்ள இஸ்லாமிய மக்களுக்கான இடஒதுக்கீட்டை 5%-ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டியளித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் இந்தக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இட ஒதுக்கீட்டை தவெக அரசு பங்கு போடக் கூடாது. தமிழகத்தில் 3.5%-ஆக உள்ள இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. ஷாஜகான் அவர்கள் பேட்டியளித்திருக்கிறார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15(4), 15(5) ஆகியவற்றின் படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியுமே தவிர மதத்தின் அடிப்படையில் யாருக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க இயலாது. இந்நிலையில், ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் விரிவுபடுத்துவது முறையானதல்ல. குறிப்பாக, இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது பிற்படுத்தப்பட்ட இந்து மக்களே!
எனவே, தன்னை "அனைவருக்குமான அரசு" என்று முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு, சமூகநீதியை கூறுபோடும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் வகையிலும் எழுந்துள்ள இக்கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இட ஒதுக்கீட்டை தவெக அரசு பங்கு போடக் கூடாது!
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 15, 2026
தமிழகத்தில் 3.5%-ஆக உள்ள இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. ஷாஜகான் அவர்கள் நேற்று பேட்டியளித்திருக்கிறார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்… pic.twitter.com/r4i1N5IKWx

