பீகாரில் தோல்வி உறுதியாகி விட்டதால் ராகுல்காந்தி மீண்டும் கட்டுக்கதைகளை பரப்புகிறார்- வானதி சீனிவாசன்
பீஹாரில் தோல்வி உறுதியாகி விட்டதால் மீண்டும் கட்டுக்கதைகளை பரப்புகிறார் ராகுல்காந்தி. பொய்க்கு பொய் சாட்சி என்பதுபோல ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவுக்கரம் நீட்டுகிறார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை (நவம்பர் 6) நடைபெறவுள்ளது. பீஹாரில் 'இண்டி' கூட்டணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. அந்த விரக்தியில் மக்களை திசைதிருப்பும் நோக்கத்தில் வழக்கம்போல வாக்கு திருட்டு என்ற பொய்யை கூறியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. பீஹாரில் வாக்கு திருட்டு நடந்ததாக அவர் கூறியதற்கு இந்திய தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் ஆதாரம் கேட்டும் கொடுக்கவில்லை. எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது என பீஹாரில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்ததும் ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் அம்பலமானது. இப்போது ஹரியானாவில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக வழக்கம்போல பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "இதையெல்லாம் யார் ஆராயப் போகிறார்கள். அடித்து விடுவோம். கிடைத்த வரை ஆதாயம்" என்ற போக்கில் ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். ஆனால், இது தகவல் தொழில்நுட்ப யுகம். பொய்யும், புரட்டும் அடுத்த நொடியே அம்பலப்பட்டு விடும். அதனால்தான், காங்கிரஸின், நேரு குடும்பத்தின் பொய், புரட்டுகளை மீறி தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடக்கும்போது, அதை கண்காணிக்கவே அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மீறி அந்த வாக்குச்சாவடிக்கு தொடர்பில்லாதவர்களை யாரும் நீக்க முடியாது. பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவி வந்தர்கள்தான் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணியின் வாக்கு வங்கி. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியால் அவர்கள் இந்தியாவில் வாக்காளர்களாக முடியாது என்பதால்தான், இதை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. பொய்களை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்யும் ராகுல் காந்திக்கு, பொய்களை பரப்பியே ஆட்சி செய்யும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. பொய்யுக்கு பொய் சாட்சி அளித்துள்ளது. மத்திய அரசின் மீது குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினால், அதை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாக நீதிமன்றம் ஆதாரம் கேட்டால், ஓடி ஒளிந்து கொண்டு, தேர்தல் வந்து விட்டால் தெருவுக்கு வந்து மீண்டும் மீண்டும் பொய்களை பரப்புவது ராகுல் காந்திக்கு வாடிக்கையாகி விட்டது. இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ராகுல் காந்தி. அவரையும், அவரது கூட்டணியையும் பீஹார் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் நிராகரிப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


