இவ்வளவு பெரிய ஊழலை மக்கள் மன்றத்தில் விளக்க தயாரா? - வானதி சீனிவாசன் கேள்வி

 
Vanathi seenivasan

தொட்டதெற்கெல்லாம் காணொளி போட்டு கண்கட்டி வித்தை காட்டும் நீங்கள், இவ்வளவு பெரிய ஊழல் விவகாரத்தை மக்கள் மன்றத்தில் விளக்கிக் கூறத் தயாரா ஸ்டாலின்? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திசை திருப்பும் மு.க.ஸ்டாலின் அவர்களே!சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசு எம். பி சீட்டுக்களைக் குறைக்கப்போகிறது என்றும், ஹிந்தியை திணிக்கிறது என்றும், தமிழகத்தையே அவமதித்துவிட்டது என்றும், ₹ பதிலாக ரூ தான் எங்கள் தமிழ் அடையாளம் என்றும் எதற்கு ஒரே நேரத்தில் இத்தனை வதந்திகளை ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளியின்றி பரப்புகிறது இந்த திமுக  அரசு என மக்களே சற்றுக் குழம்பித் தான் போய்விட்டார்கள்.

முழு பூசணியை பிடி சோற்றில் மறைப்பது போல உங்கள் ஆட்சியின் சாராய ஊழலை மறைக்கத்தான் நீங்கள் இத்தனை நாடகங்களைத் தயாரித்து சளைக்காமல் மக்களை மடைமாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நமது அமலாக்கத்துறையின் ஒற்றை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.அப்பப்பா! ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் டாஸ்மாக் துறையில் மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் என்றால், மக்கள் வரிப்பணத்தில் இன்னும் எத்தனைக் கோடிகளை சாமர்த்தியமாக கொள்ளையடித்து கோபாலபுரத்தின் கஜானாவை நிரப்பியிருப்பீர்கள்? உண்மையில் மலைத்துத் தான் போகிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் தமிழகம் என்றெல்லாம் வசனம் பேசுவீர்களே, ஊழல் செய்வது எப்படி என்பதில் தான் உங்கள் திமுக அரசு மொத்த உலகிற்கே முன்னோடியாக இருக்கிறது என்பது மீண்டுமொருமுறை உறுதியாகிவிட்டது.ஆக, தொட்டதெற்கெல்லாம் காணொளி போட்டு கண்கட்டி வித்தை காட்டும் நீங்கள், இவ்வளவு பெரிய ஊழல் விவகாரத்தை மக்கள் மன்றத்தில் விளக்கிக் கூறத் தயாரா திரு. ஸ்டாலின்? என குறிப்பிட்டுள்ளார்.