பேரவையில் அரை மணிநேரமாவது என்னை பேச திமுக அரசு அனுமதிக்குமா? வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

திமுகவுக்கு நான் சவால் விடுகிறேன். சட்டப் பேரவையில் குறுக்கீடு இல்லாமல் அரை மணி நேரமாவது பேச என்னை திமுக அரசு அனுமதிக்குமா? அப்படி அனுமதித்துவிட்டு ராகுலுக்காக வாதாட வாருங்கள் என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.

Vanathi Srinivasan files defamation against former BJP members | Covaipost

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பல்வறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்றெல்லாம் பேசியருப்பது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியா என்பது பல கட்சிகளைக் கொண்ட ஐனநாயக நாடு. அதனால் அரசியல் கட்சிகள், ஒருவரையொருவர் விமர்சிப்பது இயல்பானது. விமர்சனம்தான் ஜனநாயகத்தின் அழகு. இந்தியாவில் பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரம் இருப்பதுபோல எந்த நாட்டிலும் இல்லை.

நாட்டின் பிரதமரையே தனிப்பட்ட முறையில் தாக்கியும், கொச்சைப்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். ராகுல் தினந்தோறும் பாஜக தலைவர்களை, பிரதமரை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். சமீபத்தில் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ஒருவர் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி பேசினார். அதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்தது. 2022 செப்டம்பர் 7 முதல் 2023 ஜனவரி 30 வரை இடையில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை தவிர 136 நாட்கள் 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டார். ஜனவரி 30-ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் தலைகர் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். அங்கு, திறந்தவெளி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது ராகுலால் ஸ்ரீநகரில் பொதுக்கூட்டம் நடத்த முடிந்ததா? பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் ராகுலும் அளித்த நற்சான்றிதழ்தான் ஸ்ரீநகர் பொதுக்கூட்டம்.

Told Lok Sabha Speaker I have right to respond in Parliament: Rahul Gandhi-  The New Indian Express


காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி அமைதியை ஏற்படுத்தியதால்தான் எதிர்க்கட்சிகளால் அங்கு பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்த முடிந்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், எல்லை மீறி மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும், பாஜகவையும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதையெல்லாம் பாஜக அரசு முடக்க நினைக்கவில்லை. விமர்சிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் பணி; அதுதான் ஜனநாயகம் என்பதை பிரதமர் மோடி அவர்களும் பாஜகவினரும் உணர்ந்துள்ளனர். ஆனால், அந்நிய மண்ணில் இந்திய உள் விவகாரங்களை பேசியதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவை அவமதித்திருக்கிறார் ராகுல். இதனைத் தான் பாஜக எதிர்க்கிறது.


ராகுல், அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைவராக எதிர்க்கட்சி தலைவராக இல்லாவிட்டாலும், காங்கிரஸ் கட்சியை அவர்தான் வழி நடத்துகிறார். எனவே, வெளிநாடுகளில் ராகுலும், இந்தியாவின் இந்திய அரசின் பிரதிநிதியாகவே பார்க்கப்படுவார். 1991-1996-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாய் இந்திய அரசின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்றார். பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, வாஜ்பாய், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பல தலைவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். அப்போது இந்தியாவில் காங்கிரஸால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தபோதும், அந்நிய மண்ணில் இந்தியாவை விமர்சித்தது இல்லை. பாஜகவுக்கு தேசம் தான் முதலில். பிறகுதான் கட்சி. அதற்கு அடுத்ததுதான் தனி மனித நலன். அந்நிய மண்ணில் இந்திய தேசம் அவமதிக்கப்பட்டுள்ளது என்பதால் ராகுலை நோக்கி கேள்வி எழுப்புகிறோம். இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்துகிறோம்.

ஆன்லைன் ரம்மி: ஆளுநர் கேள்வியை நீதிமன்றம் கேட்டால் அனுப்புவார்களா?-  த.பெ.திக - விற்கு வானதி சீனிவாசன் கேள்வி - Vanathi Srinivasan asks question  to TPDK Online ...

ராகுலுக்கு வக்காலத்து வாங்கியுள்ள திமுக அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில், "வெளிநாட்டில் போய் இந்தியாவைப் பற்றி பேசக்கூடாது. ராகுல் பேசியது தவறு என்று சொல்லும் பாஜக, இந்திய நாடாளுமன்றத்தில் அவரை பேச விடவில்லை" என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளது. நாடாளுமனறத்தில் ராகுல் பேசியதை நாடே நேரலையில் பார்த்தது. நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு உள்ள உரிமை பற்றி பேசும் திமுக, தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் முடக்குகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்தாலே ஏதாவது சொல்லி அமர வைத்து விடுகிறார்கள். திமுகவுக்கு நான் சவால் விடுகிறேன். சட்டப் பேரவையில் குறுக்கீடு இல்லாமல் அரை மணி நேரமாவது பேச என்னை திமுக அரசு அனுமதிக்குமா? அப்படி அனுமதித்துவிட்டு ராகுலுக்காக வாதாட வாருங்கள். நாடாளுமன்றத்தைப் போல, சட்டப்பேரவை நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்து விட்டு ஜனநாயகம் பற்றி பேசுங்கள். மற்றவர்களுக்கு சொல்லும் உபதேசங்களை நீங்கள் முதலில் பின்பற்றுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.