கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்னடைவு..!
கோவை வடக்கு தொகுதி 2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இங்கு முதன் முறையாக 2011-ல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி. மலரவன் வெற்றி பெற்றார். தொடர்ந்து, இந்த தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்று வருகிறது. 2016-ல் பி. ஆர். ஜி. அருண்குமார் (அதிமுக), 2021-ல் அம்மன் கே. அர்ஜுனன் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் இந்த முறை இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் களமிறங்கியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில், கொங்கு மண்டலத்தின் திமுகவின் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுவதால், வானதி சீனிவாசன் இந்த தொகுதிக்கு மாறியதாவும் கூறப்படுகிறது.
கோவை வடக்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 3,45,934. இதில் ஆண்கள் 1,73,043. பெண்கள் 1,72,855 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 36. ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் 75.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக சார்பில் போட்டிட்ட துரை செந்தமிழ்ச்செல்வன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி. சம்பத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் நர்மதா ஜி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், கோவை வடக்கு தொகுதியின் 7-ம் சுற்று முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், தவெக வேட்பாளர் 25,762 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். கடந்த முறை தெற்கு தொகுதியில் வென்று, இம்முறை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் 19,104 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார். மேலும், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

