'பாரத ரத்னா' விருதுக்கு தேர்வாகியுள்ள எல்.கே. அத்வானிக்கு வாழ்த்துக்கள் - வானதி சீனிவாசன்!

 
vanathi--srinivas-3

'பாரத ரத்னா' விருதுக்கு தேர்வாகியுள்ள எல்.கே. அத்வானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதத்தின் முன்னாள் துணைப் பிரதமர், பாஜக முன்னாள் தேசியத் தலைவர், மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் இரும்பு மனிதர் திரு. எல்.கே. அத்வானி அவர்களுக்கு நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் அவருக்கு எனது பணிவான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்பது ஒரு குடும்பத்தின் கரங்களில் சிக்கிக் கொண்டது. அந்த குடும்பத்தின் அதிகாரத்திற்கு பாதிப்பு வந்த போது, நாட்டின் அரசியல் சட்டத்தையே முடக்கி, நெருக்கடி நிலையை அறிவித்தார்கள். 'இரண்டாவது சுதந்திரப் போர்' என்றழைக்கப்படும் 'நெருக்கடி நிலை'யை எதிர்த்து வீர தீரத்துடன்  போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் அத்வானி அவர்கள்.

vanathi srinivasan

 'காங்கிரஸ் -  காங்கிரஸ் எதிர்' என்றிருந்த பாரதத்தின் அரசியலை, 'பாஜக - பாஜக எதிர்' என்று மாற்றிக் காட்டியது வாஜ்பாய் - அத்வானி இணை. இரு தலைவர்களும் அரை நூற்றாண்டு காலம் இணைந்து செயல்பட்டு, பாரதத்தின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்தார்கள். அவர்கள் இட்ட அடித்தளத்தில்தான் பாஜக  தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க இருக்கிறது.


வாஜ்பாய் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட்டது. அத்வானி அவர்களும் இப்போது 'பாரத ரத்னா' விருது பெற இருக்கிறார். இந்த இரு தலைவர்களுக்கும் அவரது அரசியல் சீடரான, அவர்கள் தொடங்கி வைத்த லட்சியப் பயணத்தை பல மடங்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்று கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 'பாரத ரத்னா' விருது வழங்கி இருக்கிறார். இதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாஜ்பாய், அத்வானி அவர்களைப் பார்த்து வளர்ந்த எங்களுக்கு இதைவிட மகிழ்வான தருணம் இருக்க முடியாது. அத்வானி அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். 'பாரத ரத்னா' விருது பெற்ற எங்கள் 'பீஷ்ம பிதாமகர்' அத்வானி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் வாழ்த்துக்கள்..! வணக்கங்கள்..!! என குறிப்பிட்டுள்ளார்.