வாய் வார்த்தைக்கு அப்பா என்று கூறிவிட்டால் மட்டும் போதுமா முதல்வரே? - வானதி கேள்வி

 
Vanathi seenivasan

வெறும் வாய் வார்த்தைக்கு “நான் அனைவருக்கும் அப்பா” என்று கூறிவிட்டால் மட்டும் போதுமா முதல்வரே? ஒரு நல்ல பாசமுள்ள அப்பா தன் கண் முன்னே பிள்ளைகள் இப்படி சின்னாபின்னமாவதை வேடிக்கை பார்ப்பாரா? என பாஜக எம்.எல்.ஏ. வானதி ச்சினிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 5 சிறுவர்கள் கைதாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நமது கனவு நம்பிக்கையை சுமக்கும் எதிர்கால சந்ததியினர் இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வது பெரும் மன வேதனையளிக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்கள் போதைப்பொருளில் சிக்குண்டு தவிப்பது போதாதென்று, கடந்த சில தினங்களாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள், பள்ளி மாணவர்கள் மீதான பாலியல் வழக்குகள் போன்றவைகளும் பெருகி வருவது, நமது சமூகம் சீரழிந்து சிதைந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் திரு. ஸ்டாலின். 
 
உங்கள் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளே நிரம்பி வழியும் அளவிற்கு பதின்மவயதினர் மீதான குற்றங்களும் வழக்குகளும் அதிகரித்து வருவதைத் தடுக்க அரசு சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? சொல்லப்போனால் அதை ஒரு பொருட்டாகக் கூட உங்கள் திமுக அரசு கருதவில்லை என்பது போலத் தான் தெரிகிறது. ஆக, வெறும் வாய் வார்த்தைக்கு “நான் அனைவருக்கும் அப்பா” என்று கூறிவிட்டால் மட்டும் போதுமா முதல்வரே? ஒரு நல்ல பாசமுள்ள அப்பா தன் கண் முன்னே பிள்ளைகள் இப்படி சின்னாபின்னமாவதை வேடிக்கை பார்ப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.