வலிமை சிமெண்ட் விலை என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!!

 
ttn


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் உயர்தர ரக சிமெண்ட் வலிமையை அறிமுகப்படுத்தி விற்பனையை துவக்கி வைத்தார். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும்,  ஆலங்குளம் சிமெண்டு ஆலை ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன்,  அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 1970ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

ttn

தொடர்ந்து தமிழ்நாடு  சிமெண்ட்ஸ்  கழகத்தால் அரியலூரில் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன் ஒரு ஆலையும் 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலை நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு  சிமெண்ட்ஸ்  கழகம் என்ற பெயரில் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறது.

ttn

2021 -22 ம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது வலிமை என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர வலிமை சிமெண்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த புதிய ரக வலிமை சிமெண்ட் அதிக உறுதியும், விரைவான உலரும் தன்மையும் , அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது.

ttn

இது குறித்து தெரிவித்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் வலிமை சிமெண்ட் விலை தரத்தின் அடிப்படையில் ரூபாய் 350 மற்றும் ரூபாய் 365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அரசின் திட்டங்களுக்கும் வலிமை சிமெண்ட் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.  அம்மா சிமெண்ட் வலிமை சிமெண்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா ?/என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  அது உங்களுடைய யூகம்; தவறான புரிதல் ;அதற்கு என்னை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க கூடாது. என்று பதிலளித்துள்ளார்.