அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் - வைத்திலிங்கம் தகவல்

 
ops

அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது. 

ops eps

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் அதிமுகவி இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

vaithilingam

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தான் நீதிமன்றம் கூறியது, தீர்மானம் செல்லும் என சொல்லவில்லை என்றார்.