திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படும், பொறிக்கப்படும் - கவிஞர் வைரமுத்து

 
vairamuthu

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும் நிலையில், திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல
பொறிக்கப்படும் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். 

குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில்  சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாதம்தோறும் உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.


இந்த நிலையில், இந்த திட்டம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், பிறந்த மண்ணில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும்
பக்கபலமிருந்து தக்கபயன் நல்குவதாகும்  திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களும் தளபதி ஏற்றி வைக்கும் இந்தத் திருவிளக்கில் தீபமேற்றிக் கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.