21-வது நாளாக உண்ணா விரதம் இருந்து வரும் சமூக ஆர்வலருக்காக குரல் கொடுத்த வைரமுத்து..!!

 
Q

இஸ்டாகிராம் மூலம் இந்தியாவில் பெரும் புயலை ஏற்படுத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata Party), தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகள், நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றிற்கு எதிராக போராட்டத்தை ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சூழலியல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

சோனம் வாங்சுக் வாழ்க்கையை தழுவி வெளியானது தான் முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. லடாக்கை பூர்வீகமாக கொண்ட சோனம் வான்சுக், கல்வியாளராகவும், சூழலியல் செயற்பாட்டாளராகவும் பல விருதுகளை வென்று உலகளவில் அறியப்பட்டவர்.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இன்றுடன் 21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வான்சுக்கை, டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

ஜூன் 28, 2026 அன்று உண்ணாவிரதத்தை தொடங்கிய சோனம் வான்சுக், நேற்றைய தினம் அதாவது போராட்டத்தின் 20-ஆவது நாளில் ஒரு காணொளிப் பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில் தன் உடல் எடை 20% குறைந்துள்ளதாகவும், உடல்நிலை மோசம் அடைந்தாலும் கரப்பான்பூச்சி ஜனதா தளம் திங்கட்கிழமை (ஜூலை 20) திட்டமிட்டிருக்கும் ‘நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்று மனு அளிக்கும் நிகழ்வில்’ தான் அவசியம் பங்கேற்பேன் என்றும் கூறியிருந்தார். “அதற்கு முன் என் உயிர் பிரியாது” என்றும் உருக்கமாக பேசியிருந்தார்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

டெல்லியில் 

உண்ணா நோன்பிருக்கும்

வாங்சுக் உயிரைக்

காப்பாற்றுங்கள்

உயிரின் கடைசிச் சொட்டு

வற்றினாலும் வற்றிவிடும்;

பிறகு எதுவும் செய்ய இயலாது

அவரது உயிர் 

உடல் சார்ந்தது மட்டுமல்ல;

இந்திய உரிமை சார்ந்தது;

நாட்டு நலன் சார்ந்தது

சம்பந்தப்பட்டவர்கள்

தன்னகங்காரத்தைத்

தள்ளிவைத்து

ஓர் இந்தியனை மீட்டெடுங்கள்;

இந்தியாவின்

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்