"அமித்ஷா Mind your Tongue"- வைகோ கொந்தளிப்பு
அமித்ஷாவை விட 100 மடங்கு சக்தி கொண்டவர்களை திமுக எதிர்க் கொண்டுள்ளது. அமித்ஷா தனது நாக்கை அடக்கி பேச வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தில் மதிமுக நிர்வாகியின் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் " நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார். நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால், நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என மிரட்டுகிறார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைக்கிறது. தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலும் எந்த சக்தியும் நுழைய முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சிகள் நடைபெற்று வருகிறது. திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அமித்ஷா திமுகவை உடைத்து துடைத்து எறிவோம் என பேசுகிறார். அமித்ஷாவை விட 100 மடங்கு சக்தி கொண்டவர்களை திமுக எதிர்க் கொண்டுள்ளது. அமித்ஷா தனது நாவை (நாக்கு) அடக்கி பேச வேண்டும். கட்சிகளை விமர்சனம் செய்யும் போது மிக கவனத்துடன் பேச வேண்டும். மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து பாஜக இந்தியாவை துண்டாட பார்க்கிறார்கள். இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பாஜக நினைக்கிறது. திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட கிடையாது. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
SIR-ஐ வைத்து தமிழ்நாட்டில் 75 இலட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது, அதே SIR ஐ வைத்து 65 இலட்சம் வெளிமாநில வாக்குகள் தமிழ்நாட்டில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆசை, கனவு எனக்கு கிடையாது, நான் என்றும் முதல்வர் ஆவேன் என பேசியதில்லை. விஜயின் கனவு நினைவாகாது. காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய். ஆகாய வெளியில் மணக்கோட்டையை காட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும்" என பேசினார்.


