“மனோஜ் தான் நடித்த படங்களில் ஒரு முத்திரை பதித்திருந்தார்”- வைகோ இரங்கல்
Mar 25, 2025, 21:45 IST1742919310000

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலை உலக வரலாற்றில் கிராமங்களையும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அற்புதமான காவியங்களாக படைத்துத் தந்த இயக்குநர் இமயம் சகோதரர் பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் இருதய சிகிச்சை செய்த நிலையிலேயே மறைந்துவிட்டார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மனோஜ் தான் நடித்த படங்களில் ஒரு முத்திரை பதித்திருந்தார். மீனவ குடும்பத்தில் பிறந்து இளைஞனானபோது அவர் காதல் வயப்பட்டதும், அதில் தோல்வியும், வேதனையும் அவரைத் தாக்கியதும், என அந்தப் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து திரையுலக வாழ்க்கையிலும் வெற்றிகள் பெற்று, தந்தையின் கனவுகளை நனவாக்க வேண்டிய நேரத்தில் அவர் இயற்கை எய்தியது கலை உலகத்துக்கு பெரிய இழப்பாகும். தான் படைத்த காவியங்களில் பார்ப்போரைக் கண்ணீர் விடச் செய்த சோக காவியங்களை எல்லாம் வெள்ளித் திரைக்குத் தந்து அழியாப் புகழைப் பெற்ற பாரதிராஜா அவர்களால் இந்த துக்கத்தைத் தாங்க முடியாது. காலம் ஆறுதலை உடனே தந்துவிடாது. அவரது துயரத்திலும், குடும்பத்தார் துயரத்திலும் நானும் பங்கேற்கிறேன். திரையுலக திருப்புமுனையான பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் கண்ணீர் அஞ்சலியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.