தவெகவுடன் சேர்வதற்கு ரூ.50 கோடி பேரமா?- வைகோ பரபரப்பு பேச்சு

 
தவெகவுடன் சேர்வதற்கு ரூ.50 கோடி பேரமா?- வைகோ பரபரப்பு பேச்சு

சுய மரியாதையையும், தன்மானத்தையும் இழந்து திமுக கூட்டணியில் பயணித்தோம் என திருமண விழாவில் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “காணாமல் போகக்கூடிய நிலையில் இருந்த கட்சிக்கு 10 சீட், ஒரு ராஜ்யசபா சீட். கிளைகள் கூட இல்லாத ஒரு கட்சிக்கு 8 இடங்கள் கொடுத்தது திமுக. கிளைகளே இல்லாத கட்சி விசிக! மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆளே இருக்க மாட்டான்! வட மாவட்டங்களில் சில பகுதிகளில் ஊருக்கு 10 பேர் கூட இருக்க மாட்டான்! அந்த கட்சிக்கு 8 சீட் ஒதுக்கி நம்மை அவமானபடுத்தினார்கள். சுய மரியாதையையும் தன்மானத்தையும் கொஞ்சம் இழந்து விட்டு தான் திமுக கூட்டணியில் பயணித்தோம். என்னை போல் திமுகவை உயர்த்தி பிடித்து பேசிய தலைவர் யாராவது உண்டா? 

விஜய்  இன்னும் ஒரு 6 மாத காலத்திற்குள் தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்திக் கொள்வார். விஜயிடம் கருத்தும் இருக்கிறது. காரமும் இருக்கிறது. தவெகவுடன் சேர்வதற்கு ரூ.50 கோடி பேரம் பேசினோமா? நானும் என் மகனும் அண்ணா சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விட்டோமா?  நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும் என்பது போல் ஒருவர் பேசுகிறார். எனக்கு பணத்தாசை கொஞ்சம் கூட கிடையாது. நமது கட்சிக்கான சோதனை காலம் முடிந்துவிட்டது. பனிகாலம் முடிந்து வசந்த காலம் வரப்போகிறது. 9ஆண்டு கூட்டணியில் அங்கீகாரம் இல்லை. தொண்டர்களின் காயங்களுக்கு மருந்திடுவோம். தன்மானத்தையும், சுயமரியாதையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு உள்ளோம்” என்றார்.