“4000 கோடி செலவு பண்ணப்போ யாரு ஆட்சியில இருந்தா? திமுக ஆட்சியில் முறைகேடுகள்”- வைகோ
ஊழலை அடியோடு நீக்குவது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “4000 கோடி ரூபாய் செலவு பண்ணப்போ யாரு ஆட்சியில இருந்தா.. ? அப்போது கூட்டணி தர்மத்தை காப்பதற்காக வெளியே விமர்சனம் செய்ததில்லை. உள்ளுக்குள் பேசும்போது என் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன். ஆனால் டெண்டர் கமிஷன், பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலைமை இன்று கிடையாது. 4 மாதங்களில் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே ஊழலில் ஊறி திளைத்தவர்கள் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் பயங்கரமான குற்றச்சாட்டை தவெக அரசு மீது வைக்குறார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த அரசை செயலிழக்க செய்ய நினைக்கிறார்கள்.தவெக ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட எந்தத் துறையிலும் கமிஷன் கிடையாது. ஊழல் குறைந்துள்ளது. ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது. அதனை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் கமிஷன் வாங்கிப் பழகிய அதிகாரிகள், தற்போது தவெக ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாததால், தவெக அரசைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் SIR பிரச்சனைக்கு திமுக தான் காரணம். SIR பணி நடைபெற்றபோது திமுக நிர்வாகிகள் தான் உடன் சென்றனர். கூட்டணி தர்மத்தை காக்க எதுவும் பேசவில்லை. SIR பிரச்சனைக்கு திமுக தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் ஆணையரால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டியது திமுக” என்றார்.

