“திமுகவின் சின்னத்தில் போட்டியிட நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம்”- வைகோ பதில்

 
வைகோ

சட்டமன்ற தேர்தலில் உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்தேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “சட்டமன்ற தேர்தலில் உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்தேன். ஒரு தொகுதியில் நாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம், அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறினர். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை நிர்பந்தித்தார்கள். திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக சீட், எங்களுக்கு 4 சீட் தான். திமுகவின் வெற்றிக்காக நாங்கள் உடல், பொருள் , ஆவியை கொடுத்து உழைத்தோம். திமுக தலைமையிலான கூட்டணிக்கு 34 தொகுதிகளில் ஆதரவாக நான் பிரச்சாரம் செய்த நிலையில் 24 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சொந்த சின்னத்தில் மதிமுக போட்டியிட்டு இருக்கலாம் என்ற ஆதங்கம் கட்சியினர் இடையே உள்ளது. திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து பொதுக்குழுவின் கருத்தை கேட்டு முடிவு செய்வோம். காங்கிரஸ் கட்சியுடன் எங்களை ஒப்பிடாதீர்கள். பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதித்து முடிவெடுப்போம். திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மதிமுக தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. தொண்டர்கள் மனதில் உள்ள வருத்தம், நிர்வாகிகள் என்ன நினைக்கின்றனர் என பொதுக்குழுவில் கருத்து பரிமாறப்படும்” என்றார்.