“சீட் முக்கியமல்ல... கலைஞருக்கு வாக்குறுதி அளித்தபடி ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறேன்”- வைகோ

 
vaiko

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதிமுகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர்  வைகோ வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி தமிழர் வரலாறு மீட்பு, வேளாண்மை பால் உற்பத்தி மீனவர்களின் நலன்,கடல் வளம் போதைப்பொருள் ஒழிப்பு, மாற்றுத்திறனாளிகள் நலன், தமிழ் ஈழமே தீர்வு 51 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “முதல்வர் காவல்துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். காவல்துறையை முடுக்கி விட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். அதே போல மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார். விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயரை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரண வழங்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இரண்டு இடங்கள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் இறுதி காலத்தின் போது அவருக்கு நான் ஒரு வாக்குறுதி அளித்தேன். ஒரு காலத்தில் நான் உங்களுக்கு எப்படி உறுதுணையாக இருந்தேனோ... அதேபோல ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என அவரது கையை பற்றி உறுதி அளித்தேன். வருங்காலத்திலும் திமுகவுக்கு தோள் கொடுப்போம்.

திமுக கூட்டணியில் அதிக இடங்கள் வாங்கிய மற்ற கட்சிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் இல்லை. திராவிட இயக்க கொள்கைகளை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதனால் திமுக எங்களுக்கு வழங்கிய இடங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டோம். ஈரான் மீதான தாக்குதலை பிரதமர் மோடி கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு லாலி பாடிக்கொண்டிருக்கிறார். கேஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சின்னஞ்சிறு நாடான வியட்நாமிடம் மூக்கறு பட்டதை அமெரிக்கா மறந்துவிட்டது. விஜய்க்கு ஒரு சில இடங்களில் நல்ல கூட்டம் கூடுகிறது. அவரைப் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை” என்றார்.